search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லெட் ஆலை"

    அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

    மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதி காக்க வேண்டும்.

    எந்தவித போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய தேவை இல்லை. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக ஆலை திறக்கப் போகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல். நாளைக்கே ஆலையை திறக்க எந்த உத்தரவும் இல்லை. ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த உத்தரவுக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பெண்கள் மனு அளித்துள்ளனர். #sterlite #ThoothukudiProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சிறு,குறு தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், டேங்கர் லாரிகள் தினசரி தாமிரதாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி, தாது மணல், அமிலங்கள், இதர மூலப்பொருட்களை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன்மூலம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கண்காணிப்பாளர்கள், அதனுடன் தொடர்புடைய லேத் பட்டறைகள், மெக்கானிக், லாரிக்கு பெயிண்ட் அடிப்போர், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்கள் தொழில் நலிவடைய தொடங்கியுள்ளது. இதனால் தனியார் வங்கிகளில் கடன் தவணை செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். மாத வருமானமின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படுகிறோம். வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாமலும் அவதிப்படுகிறோம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து செயல்பட செய்யவேண்டும்.



    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தூத்துக்குடி பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். #sterlite #ThoothukudiProtest
    ×